ambur chicken biryani

How to prepare tastiest ambur chicken biryani?

ஆம்பூர் சிக்கன் பிரியாணி

      நம் நாட்டில் பல்வேறு பகுதியில் பல்வேறு வகையான பிரியாணிகள் உள்ளது. ஒவ்வொரு பிரியாணியும் அந்தந்த இடத்திற்கு தகுந்தாற்போல் தனித்துவமான சுவையும், மணமும் கொண்டுள்ளது. ஆம்பூர் பிரியாணி ஆனது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகரத்தில் உருவான ஒரு சிறப்பு மிக்க உணவாக விளங்குகிறது.

     இந்த ஆம்பூர் பிரியாணி ஆனது 1900 களின் முற்பகுதியில் இருந்த ஒரு பழமையான, பாரம்பரியமிக்க உணவாகும். இது ஆற்காடு நவாப் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க உணவாகும். பிறகு இந்த உணவு மக்களிடையே பிரபலம் அடைந்து நாளடைவில் ஆம்பூர் நகரத்திற்கு ஒரு அடையாளமாக மாறி உள்ளது.

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

  • சிக்கன் ஒரு கிலோ
  • சீரக சம்பா அரிசி ஒரு கிலோ
  • கிராம்பு 2 கிராம் 
  • ஏலக்காய் 2 கிராம் 
  • பட்டை 2 கிராம்
  • ஆயில் 250 ml
  • பெரிய வெங்காயம் 500 கிராம் 
  • தக்காளி 400 கிராம்
  • காய்ந்த மிளகாய் 5 
  • காஷ்மீர் மிளகாய் 5
  • இஞ்சி 100 கிராம் 
  • பூண்டு 100 கிராம்
  • தயிர் 250 ml
  • எலுமிச்சை சாறு சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு 
  • கொத்தமல்லி ஒரு கைப்பிடி 
  • புதினா ஒரு கைப்பிடி

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பாத்திரங்கள்

  • பாத்திரம் 2
  • கரண்டி 1 
  • அரிசி வடிகட்டி 1

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்ய தேவைப்படும் நேரம்

40 முதல் 50 நிமிடம்

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்முறை

       முதலில் காய்ந்த மிளகாய் மற்றும் காஷ்மீர் மிளகாய் ஆகியவற்றை வெந்நீரில் ஊற வைத்து நன்கு மைய அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆம்பூர் பிரியாணியில் மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை உபயோகப்படுத்தக் கூடாது. இந்த மிளகாய் சாந்தை காரத்திற்கு நாம் உபயோகித்துக் கொள்ளலாம். இந்த மிளகாய் சாந்து இந்த ஆம்பூர் பிரியாணிக்கு தனித்துவமான சுவையை தருகிறது.

      முதலில் இரண்டு பாத்திரத்தை எடுத்து இரண்டு அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அரிசிக்கு 3 லிட்டர் தண்ணீர் என்ற அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீர் உள்ள அடுப்பை சிம்மில்(மிதமான நெருப்பு)  வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சூடு ஏறியதும் 250 ml ஆயிலை ஊற்ற வேண்டும். பிறகு அதில் 2 கிராம் பட்டை, 2 கிராம் ஏலக்காய், 2 கிராம் கிராம்பு ஆகியவற்றை போட்டு சிறிது வதங்கியதும் அதில் பெரிய வெங்காயம் 500 கிராம் ஐ போடவும்.

      பெரிய வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இஞ்சி விழுது 100 கிராம் மற்றும் பூண்டு விழுது 100 கிராம் ஆகியவற்றை போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறவும். பிறகு 400 கிராம் தக்காளியை போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும்.

      இதில் நாம் அரைத்து வைத்துள்ள மிளகாய் சாந்து இரண்டு டேபிள் ஸ்பூன், ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் ஒரு கைப்பிடி புதினா ஆகியவற்றை போட்டு கிளறவும். இப்பொழுது இதில் ஒரு கிலோ சிக்கன் போட்டு பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக தயிர் 250 ml மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து வதக்கியவுடன் இதில் 500 ml தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வரை வேக விட வேண்டும்.

      இப்பொழுது மற்றொரு பாத்திரம் வைத்துள்ள அடுப்பின் நெருப்பை அதிகமாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த தண்ணீர் நன்கு கொதித்த உடன் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள ஒரு கிலோ சீரக சம்பா அரிசியை அதில் போட வேண்டும். பிறகு அதில் சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பிறகு இரண்டு நிமிடம் கழித்து இந்த அரிசியை நன்கு வடிகட்டி உடனே அந்த பிரியாணி கலவையில் போட வேண்டும். 

      இப்பொழுது அந்த பிரியாணி கலவை மற்றும் இந்த அரிசியை சேர்த்து லேசாக கிளறி விட வேண்டும். இந்த அடுப்பை சிம்மில் வைத்து நன்கு மூடி போட்டு அந்த மூடி மேல் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைக்க வேண்டும். இதுவே பிரியாணிக்கு தம் போடும் முறையாகும். இப்பொழுது ஒரு 10 நிமிடம் கழித்து அதை திறந்து பார்த்தால் சுவையான, மணமான ஆம்பூர் ஸ்பெஷல் பிரியாணி தயார்.

Share

Leave a Reply