Delicious banana flower curry recipe, village-style banana gravy, and banana chutney - Payanali

Delicious banana flower curry recipe, village style banana flower gravy, and banana flower chutney.

உங்களுக்கு ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளதா? அதை கரைக்க வேண்டுமா? அப்பொழுது இது உங்களுக்காக தான் இந்த வாழைப்பூ குழம்பு. வாருங்கள் கிராமத்து முறைப்படி வாழைப்பூ குழம்பு மற்றும் வாழைப்பூ சட்னி எப்படி வைப்பது என்று பார்க்கலாம்

வாழை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்து பாகங்களும் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது. அதில் ஒன்றுதான் இந்த வாழைப்பூ. இப்போ இருக்கும் கால கட்டத்தில் அதிகமாக யாரும் இந்த வாழைப்பூவை சமைப்பதில்லை. ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன . உள்மூலம், வெளிமூலம், மலச்சிக்கல் செரிமான கோளாறு ஆகியவற்றை சரி செய்வதற்கு வாழைப்பூ பயன்படுகிறது. இந்த வாழைப்பூவில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது ஆதலால் வாரத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக எல்லோரும் வாழைப்பூவை உபயோகிக்க வேண்டும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல்  மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் போக்குகிறது. இப்படி இவ்வளவு நற்குணங்கள் நிறைந்த இந்த வாழைப்பூவை கிராமத்து முறைப்படி எப்படி சமைத்து சாப்பிடுவது என்று பார்க்கலாம் வாருங்கள்.

வாழைப்பூ குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு 100 கிராம் 

வாழைப்பூ ஒன்று 

சிறிய வெங்காயம் 10 முதல் 15 

தக்காளி 2 

பச்சை மிளகாய் 2

கருவேப்பிலை ஒரு கொத்து 

தாளிப்பிற்கு வரமிளகாய் 

 கடுகு தேவையான அளவு 

உப்பு தேவையான அளவு 

கடலை எண்ணெய் தேவையான அளவு 

குழம்பு மிளகாய் தூள் தேவையான அளவு 

மஞ்சள் தூள் தேவையான அளவு

தேவையான பாத்திரங்கள்

1 குக்கர் 

1 கடாய் 

1 கரண்டி

வாழைப்பூ குழம்பு தயாரிப்பு நேரம்

30 முதல் 40 நிமிடம் வரை 

வாழைப்பூ குழம்பு செய்முறை

முதலில் வாழைப்பூவை எடுத்து உரித்து இதில் உள்ள நரம்பு பகுதியை அகற்றி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் பாசிப்பருப்பை போட்டு மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும். வறுத்த பாசிப்பருப்பை குக்கரில் எடுத்து போட்டு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த பாசிப்பருப்பை மத்தில் நன்கு கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கடாய் சூடு ஏறியவுடன் அதில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு போடவும். கடுகு நன்கு பொறிந்ததும் அதில் ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதக்கியவுடன் அதில் 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை போடவும் சின்ன வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இப்பொழுது நம் நறுக்கி வைத்த வாழைப்பூவை நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். அலசிய வாழைப்பூவை அந்த கடாயில் போட்டு நன்றாக வதக்கவும். வாழைப்பூ நன்றாக வதங்கியவுடன் அதில் உப்பு, மஞ்சள் தூள் சிறிதளவு, தேவையான அளவு குழம்பு மிளகாய் தூள் ஆகிவற்றைப் போட்டு நன்று கிளறிக் கொள்ளவும். பிறகு அதில் காய் வேகும் அளவிற்கு தேவையான தண்ணீரை ஊற்றவும். 

இப்பொழுது காய் வெந்தவுடன் நாம் வேகவைத்து தனியாக எடுத்து வைத்துள்ள பாசிப்பருப்பை அந்த குழம்பில் கலக்கவும். இப்பொழுது இறுதியாக கொத்தமல்லி தூவி சூடான மற்றும் சுவையான குழம்பை பரிமாறவும்.

இந்த வாழைப்பூவை வைத்து சுவையான வாழைப் பூ சட்னி செய்யலாம்.. வாருங்கள் அதையும் பார்ப்போம்.

வாழைப் பூ சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள்

வரமிளகாய் 4 முதல் 5 

சிறிய வெங்காயம் 10 முதல் 15

பூண்டு 3 பல்

தக்காளி 2

கடலை எண்ணெய் தேவையான அளவு 

உப்பு தேவையான அளவு 

தேங்காய் பூ தேவையான அளவு

வாழைப் பூ சட்னி செய்முறை

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சுத்தம் செய்யப்பட்ட வாழைப்பூவை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு சிறிது உப்பு போட்டு அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கி பிறகு அதில் அரைவேக்காடாக வேக வைத்த வாழைப்பூவை அதில் போட்டு நன்கு வேகம் வரை அனைத்தையும் நன்றாக வதக்கவும். இப்பொழுது அதில் சிறிய தேங்காய் பூவை சேர்த்து வதக்கி பிறகு இறக்கவும். இப்பொழுது ஆறிய உடன் இந்த கலவையை நன்றாக அரைக்கவும். இறுதியாக சுவையான வாழைப்பூ சட்னி தயார்.

Share

Leave a Reply