Table of Contents
தைராய்டு என்றால் என்ன? தைராய்டுக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்களை பற்றி பார்ப்போம்
தைராய்டு என்பது அனைவரும் பயப்படும் அளவிற்கு ஒரு நோய் அல்ல. இது ஒரு சுரப்பி ஆகும். இது கழுத்தின் முன் பகுதியில் பட்டாம்பூச்சி அமைப்பைக் கொண்டு இருக்கும் ஒரு சுரப்பியாகும். அனைவருக்கும் இந்த சுரப்பி ஆனது கழுத்தின் முன்பகுதியில் அமைந்திருக்கும். தைராய்டு சுரப்பியானது T3 மற்றும் T4 தைராய்டு ஹார்மோன்களை உருவாக்குகிறது.
நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்துகிறது மற்றும் நம் உடலின் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. முக்கியமாக கர்ப்ப காலத்தில் சிசுவில் உள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது. மேலும் இவை இதயத்துடிப்பை கட்டுப்படுத்தி நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவை நமது உடம்பில் உள்ள எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. மேலும் நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
இப்படிப்பட்ட தைராய்டு ஹார்மோன்கள் நிலையான அளவு இருந்தால் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லை. ஆனால் அதுவே தைராய்டு ஹார்மோன்களின் அளவு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ இருந்தால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
முக்கியமாக தைராய்டுகளை இரண்டு வகையாக பிரிக்கின்றனர்.
- ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism)
- ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyroidism)
ஹைப்போ தைராய்டிசம்
தைராய்டு சுரப்பியானது போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை (T3 & T4) உற்பத்தி செய்யாத போது இந்த ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது.
ஹைப்போ தைராய்டிசம் அறிகுறிகள் பின்வருமாறு
- எடை அதிகரிப்பு
- உலர்ந்த சருமம்
- மூட்டு மற்றும் தசை வலி
- மனச்சோர்வு
- உடல் மிகவும் சோர்வுற்று இருக்கும்
- மெதுவான இதயத்துடிப்பு
- அதிக அளவு கொழுப்பு
- ஒழுங்கற்ற மாதவிடாய்
ஹைப்போ தைராய்டிசம் காரணங்கள்
அயோடின் குறைபாடு
தைராய்டு சுரப்பிக்கு தைராய்டு ஹார்மோன்களை உருவாக்க அயோடின் தேவைப்படுகிறது. எனவே நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் அயோடின் அளவு குறைவாக இருந்தால் இந்த ஹைப்போ தைராய்டிசம் ஏற்படும்.
தன்னுடல் தாக்கல்
இவை நம் உடம்பில் நமக்கு எதிரான நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கி தைராய்டு சுரபியை தாக்குகிறது. காலப்போக்கில் வீக்கம் மற்றும் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதை குறைக்கிறது. பொதுவாக இது வயது முதிர்ந்த பெண்களை அடிக்கடி பாதிக்கிறது.
கதிர்வீச்சு சிகிச்சை
கதிர்வீச்சு சிகிச்சை ஆனது தைராய்டு சுரப்பியை சேதம் அடையச் செய்கிறது. ஆதலால் அந்த தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதில்லை. எனவே நம் வயிற்றுப் பகுதிகளுக்கு மேலே ஏதாவது புற்று நோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இந்த கதிர்வீச்சானது தைராய்டு சுரப்பியை பாதிக்கிறது. ஆதலால் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது.
சில மருந்துகள் (லித்தியம் போன்றவை)
லித்தியம் போன்ற சில மருந்துகள் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியில் தலையிடுவதால் இந்த ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது.
தைராய்டு அறுவை சிகிச்சை
தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது மேலும் இந்த அறுவை சிகிச்சையில் தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ இந்த தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது.
பிறவி நிலைமைகள்
ஒரு சில குழந்தைகள் பிறக்கும் போதே தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் சுரப்பியின் திறனை பாதிக்கும் பிற நிலைமைகளுடன் பிறக்கின்றன.
ஹைப்பர் தைராய்டிசம்
ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி அதிக அளவு தைராய்டு ஹார்மோன்களை (T3 & T4) உற்பத்தி செய்தன் மூலம் ஏற்படுகிறது.
ஹைப்பர் தைராய்டிசம் அறிகுறிகள் பின்வருமாறு
- அதிக அளவு முடி கொட்டுதல்
- அடிக்கடி மலம் கழித்தல்
- அதிக அளவு வியர்த்தல்
- கை மற்றும் விரல்கள் நடுக்கம்
- தூக்கமின்மை
- மாதவிடாய் கோளாறு
- அதிகமாக பசி எடுத்தல்
- உடல் எடை குறைவு
ஹைப்பர் தைராய்டிசம் காரணங்கள்
மல்டினோடுலர் கோயிட்டர்
தைராய்டு சுரபியில் பல முடிச்சுகள் உருவாகும் இந்த நிலையை தான் மல்டினோடுலர் கோயிட்டர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் தைராய்டு சுரப்பியானது பெரிதாகிறது. இந்த முடிச்சுகள் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. ஆதலால் ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது. இவை வயதானவர்களுக்கு அதிகமாக வருகிறது.
தைராய்டு சுரப்பியின் கட்டிகள்
புற்றுநோய் மற்றும் புற்றுநோய் அல்லாத இரண்டு கட்டிகளும் தைராய்டு சுரப்பியில் அதிக அளவு தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கிறது. இது ஹைப்பர் தைராய்டிசத்தை ஏற்படுத்தும். கட்டி இருப்பதாக சந்தேகமாக இருந்தால் அது புற்றுநோயா என்பதை அறிய பயாப்ஸி செய்யப்படும். தைராய்டு கட்டிகளுக்கு சிகிச்சைகள் என்னென்னவென்றால் தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் மாற்றுவது, கதிரியக்க அயோடின் சிகிச்சை ஆகியவை அடங்கும். தைராய்டு கட்டிகளை முன்கூட்டியே அறிந்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
கிரேவ்ஸ் நோய்
கிரேவ்ஸ் நோய் ஹைப்பர் தைராய்டிசத்திற்கு மிகவும் பொதுவான காரணமாகும். இது ஒரு ஆட்டோ இம்யூன் பிரச்சனை ஆகும். இது நம் உடலில் நமக்கு எதிரான ஒரு நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குகிறது. இந்த நோய் எதிர்ப்பு அமைப்பானது தைராய்டு சுரப்பையை தாக்கி அதிக அளவு தைராய்டு ஹார்மோன்களை சுருங்கச் செய்கிறது. இதனால் ஹைப்பர் தைராய்டு ஏற்படுகிறது.
அதிக அளவு அயோடின் எடுத்துக் கொள்ளுதல்
தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்திக்கு தேவையான ஒன்று அயோடின் ஆகும். அதிகப்படியான அயோடின் நாம் எடுத்துக் கொள்வதால் தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. ஆதலால் ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது. எனவே அதிக அளவு அயோடின் உள்ள சப்ளிமென்ட் மற்றும் உணவுப் பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள கூடாது. உடலுக்கு தேவையான அளவு அயோடினை விட அதிக அளவு அயோடின் எடுத்தால் இந்த ஹைப்பர் தைராய்டிசம் ஏற்பட ஒரு காரணம் ஆகிறது.
தைராய்டிடிஸ்
இந்த தைராய்டிடிஸ் வகையை பொறுத்து தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தியில் அதிகமாக இருந்தால் அது ஹைப்பர் தைராய்டிசம் என்றும் தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தியில் குறைவாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டிசம் என்றும் அழைக்கப்படுகிறது.
தைராய்டிடிஸ் பொதுவான காரணங்களில் ஆட்டோ இம்யூன் கோளாறுகள், வைரஸ் தொற்றுகள் மற்றும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் தைராய்டு ஆகியவை அடங்கும். சில சமயங்களில் தைராய்டு சுரப்பி அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்படுவது அவசியமாக இருக்கலாம்.
தைராய்டு ஹார்மோன் மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்
தைராய்டு ஹார்மோனை மருந்து அல்லது சப்ளிமென்ட் மூலமாக அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது. தைராய்டு ஹார்மோன்களை நாம் அதிக அளவு மருந்து வடிவில் எடுத்துக் கொண்டால் தைராய்டு ஹார்மோன்கள் அதிகப்படியாக உற்பத்தியாகிறது. எனவே இந்த அதிகப்படியான தைராய்டு ஹார்மோன்கள் ஹைப்பர் தைராய்டிசத்தை உருவாக்குகிறது.
முக்கியமாக ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் அந்தந்த தைராய்டிசத்திற்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
நன்றி !!
Next Article to Read
- Are you suffering from White discharge or vaginal discharge? Let’s find out the reasons
- Foods that should be avoided by people with diabetes (நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்)?
- நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (diabetic diet) உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.
- நீரிழிவு (diabetes) அல்லது சர்க்கரை நோயால் கஷ்டப்படுகிறீர்களா? Follow these simple steps – Payanali
- Lice and Dandruff Problem? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அவற்றை முற்றிலுமாக எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
- Weight loss program | Foods and Proteins importance – Payanali
- இந்த இரண்டு பொருள் போதும் எப்படிப்பட்ட வாயு தொல்லையாக இருந்தாலும் ஒரே மணி நேரத்தில் சரிசெய்யலாம்.
- குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஒரு சத்துமாவு போதும்
- What are the best home remedies for treating thyroid disease?
- The best healthy diet food for Hyperthyroidism
Share